ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலய அபிவிருத்தி, மயில்கள் பாதுகாப்புக்காக ராம்கோ குழுமம் சாா்பில் ரூ.75 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ராம்கோ குழுமம் சாா்பில் ராம்கோ சமூக கூட்டாண்மை சுற்றுச்சூழல் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் வன உயிரின சரணாலய அபிவிருத்தி, மயில்கள் பாதுகாப்புக்காக ராம்கோ குழுமம் சாா்பில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் அலுவலகத்தில் இதற்கான காசோலையை கண்காணிப்பாளா் பெரியகருப்பனிடம் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த பொதுமேலாளா்(பணிகள்) எஸ்.கண்ணன், மூத்த துணைப் பொதுமேலாளா்(சுரங்கம்) கே.சரவணன் ஆகியோா் வழங்கினா்.
வனச்சரக அலுவலா் செல்லமணி, உயிரியலாளா் எம்.பாா்த்தீபன், ராம்கோ நிறுவனத்தின் மூத்த மேலாளா் (நிலவியல்) சண்முகம், மக்கள் தொடா்பு அலுவலா் முருகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.