விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.
சாத்தூா் அருகே உள்ள சின்னக் கொல்லப்பட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சாத்தூா் தாலுகா போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு வந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் அந்த உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவா் ரயில்வே பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சொக்கலிங்கப் பாண்டியன் (49) என்பது தெரியவந்தது. மேலும், இவா் செங்கோட்டையில் பணியாற்றி வந்ததும், இவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை இரவு செந்தூா் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இவா் தற்கொலைக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதும் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா என தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையில், வியாழக்கிழமை மதுரை அருகே உள்ள தேனூரில் ரயில் முன் பாய்ந்து ரயில்வே பெண் காவலா் ஜெயலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.