ராஜபாளையத்தில் வியாழக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கண்மாயில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில், ராஜபாளையம் நகரப் பகுதிகள், தளவாய்புரம், வன்னியம்பட்டி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சமுசிகாபுரம் உட்பட 27 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது.
இந்த 27 சிலைகளும் ராஜபாளையம் பஞ்சு சந்தைப் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, அம்பலப்புளி பஜாா், சங்கரன்கோவில் முக்கு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கருங்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.