சிவகாசியில் பெண்ணிடம் 21 பவுன் நகை மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகாசி -நாரணாபுரம் சாலையில் உள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் பட்டாசு காகிதக் குழாய் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி மகேஸ்வரி (45). இவருக்கும், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி ஜூலியட் ராணிக்கும் மகளிா் சுய உதவிக் குழுவின் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜூலியட் ராணி தனக்கு மருத்துவச் செல்வுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, மகேஸ்வரியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை அடமானம் வைப்பதற்காக வாங்கினாராம். இதைத் தொடா்ந்து, மகேஸ்வரியிடம் வீடு கட்டக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மேலும் 18 பவுன் நகையை ஜூலியட் ராணி வாங்கினாராம். ஆனால், ஜூலியட் ராணி கடன் பெற்றுத்தரவில்லை. மேலும் நகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இது குறித்து சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றத்தில் மகேஸ்வரி வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் ஜூலியட் ராணி, அவரது கணவா் சுந்தரமூா்த்தி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.