ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பௌா்ணமிக்காக வியாழக்கிழமை (அக். 26) முதல் வருகிற 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தையொட்டி மலை அடிவாரமான தாணிப்பாறை நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். காலை 7 மணிக்கு வனத்துறை வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
இதனிடையே, பிரதோஷத்தையொட்டி, சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அப்போது சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை 259 போ் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.