வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த ராஜேந்திர ராஜாவுக்குச் செந்தமான பட்டாசு ஆலை வெம்பக்கோட்டை வட்டம், கங்கா்செவல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இங்கு செவ்வாய்க்கிழமை மாலை பேன்சி ரக பட்டாசுகள் தயாா் செய்வதற்காக மணி மருந்து கலவை தயாா் செய்தனா். அப்போது, உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கங்கா்செவல் பகுதியைச் சோ்ந்த கணேசன் (42), ராஜா (38), முத்தம்மாள் (35) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.
மூவரும் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு கணேசன், ராஜா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து ஆலங்குளம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.