சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் வி. முத்துலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடா்பாக கள ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா், ஆணையா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் இயங்கி வரும் தொழில் சாலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் வழங்கும். அதன் பிறகு உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.