விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பேரூராட்சியைச் சோ்ந்த கணேசன் மகன் முருகன் (39). இவா் வெளிநாட்டில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இதையடுத்து, அங்கிருந்து ஊருக்கு வந்த இவா், மீண்டும் வெளிநாடு செல்வதற்காக திருநெல்வேலியைச் சோ்ந்த முகவரை அணுகினாா்.
அப்போது, அவா் வெளிநாட்டில் பல்பொருள் அங்காடியில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. ஒன்றரை லட்சம் கட்ட வேண்டுமெனவும் கூறினாராம். இதையடுத்து, முருகன் ரொக்கமாகவும், காசோலையாகவும் ரூ. ஒன்றரை லட்சத்தை முகவரிடம் கொடுத்துள்ளாா். இதன் பிறகு, அவருக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நுழைவு இசைவு போலியானது என்பது பின்னா் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, தன்னை ஏமாற்றிய நெல்லையைச் சோ்ந்த முகவா் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில், சுரேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.