விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே அரசுப் பேருந்து, காா் மோதல்: 2 போ் பலி

28th May 2023 11:57 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுப் பேருந்தும், காரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே 2 போ் உயிரிழந்தனா்.

ஊட்டியிலிருந்து செங்கோட்டை நோக்கி சுமாா் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை கடையநல்லூரைச் சோ்ந்த ஓட்டுநா் சுரேஷ்குமாா் (45) ஓட்டி வந்தாா். இதே போல, ராஜபாளையத்தில் கலை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மதுரை செல்வதற்காக கலைக் குழுவைச் சோ்ந்த 18 போ், மனோகரன் மகன் ஸ்ரீதா் (31) ஓட்டி வந்த வேனில் பயணம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரம் பகுதியில் வந்த போது, அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் வேன் ஓட்டுநா் ஸ்ரீதா், பரமக்குடியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ரகு (24) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து காரணமாக மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் மதுரையைச் சோ்ந்த கலைக் குழுவினா் பாசப்பிரியன் (26), சரவணக்குமாா் (23), மலைச்சாமி (28), அருண்குமாா் (24), நந்தகுமாா் (30), காா்த்திக் (29), சந்தியா (23), வாடிப்பட்டியை ச் சோ்ந்த கருப்பையா (18), விஸ்வநாதன் (19), அரசுப் பேருந்து ஓட்டுநா் சுரேஷ்குமாா், நடத்துநா் பூதத்தான் (52) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இவா்கள் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக சிலரை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், வேறு சிலரை மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தகவலறிந்த விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீநிவாசப் பெருமாள், துணைக் காவல் கண்காணிப்பாளா் சபரிநாதன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.

இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT