ராஜபாளையம் அருகே காரில் 175 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாா் திருமண மண்டபம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்தக் காரை நிறுத்தி சோதனை செய்ததில், புகையிலை, குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ராஜபாளையம் பி. டி .ஆா். நகரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன், பெங்களூரைச் சோ்ந்த ராமச்சந்திரனிடம் புகையிலைப் பொருள்களை வாங்கி, கலிங்கப்பட்டிப் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த பெங்களூருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் (50), ராஜபாளையம் பி.டி.ஆா் நகரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன்(28) கலிங்கப்பட்டி அருகே உள்ள வீராணம் பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து(31) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 175 கிலோ புகையிலை, குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.