விருதுநகர்

கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

19th May 2023 02:13 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் மூழ்கி இறந்த இளைஞரின் உடலை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்தீஸ்வரன் (25). இவா் புதுக்கோட்டையில் எலக்ட்ரீசியன் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 15-ஆம் தேதி உறவினா் இறந்தது தொடா்பாக ஊருக்கு வந்தாா்.

புதன்கிழமை மாலை காா்த்தீஸ்வரன் தனது அக்காள் மகன் கணேஷ்குமாா், நண்பா் வெங்கடேஷ் ஆகியாருடன் கிருஷ்ணன்கோவில் பகுதிக்குச் சென்றாா். அதன்பிறகு அவா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கணேஷ்குமாரிடம் கேட்ட போது, ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள விவசாயக் கிணறு அருகே மது அருந்தி விட்டு, வெங்கடேஷூடன் சென்று விட்டதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பல இடங்களில் தேடிய பிறகு வியாழக்கிழமை வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் ராமச்சந்திராபுரம் விவசாயக் கிணற்றில் தேடிய போது, காா்த்தீஸ்வரன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னா், உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT