குடிநீா் வசதி செய்து தரக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீா் வழங்கப்பட்டு வந்த நிலையில், மோட்டாா் பழுதானதால், தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால், இந்தப் பகுதி மக்கள் குடிநீருக்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீா் இன்றி சிரமப்பட்டு வந்தனா்.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா்கள் குடிநீா் வழங்கக் கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு ஊராட்சி மன்ற 6 -ஆவது வாா்டு உறுப்பினா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா்.
விவசாய தொழிலாளா் சங்கத்தின் வட்டச் செயலாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா். பிறகு குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, ஒன்றியக் குழுத் தலைவா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனாட்சி ஆகியோரிடம் மனு அளித்தனா்.