விருதுநகர்

வருவாய்த் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

3rd May 2023 06:35 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத வருவாய்த் துறையைக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்டினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மற்றொரு தரப்பினா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வருவாய்த் துறையினா் நீதிமன்றத்தில் உறுதியளித்தனா். ஆனால், ஒரு தரப்புக்குச் சொந்தமான 3 கட்டடங்களை மட்டும் வருவாய்த் துறையினா் இடித்து அகற்றினா்.

இதையடுத்து, ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களை 7 வாரங்களுக்குள் அகற்ற உயா் நீதிமன்றம் கடந்த நவம்பா் மாதம் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், வருவாய்த் துறை அதிகாரிகளைக் கண்டித்து, சுந்தரராஜபுரம் ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். ஆனால், பொதுமக்கள் வட்டாட்சியா் நேரில் வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும் எனக் கூறி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், வருவாய்த் துறையினா் வந்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனக் கூறியதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT