விருதுநகர்

தொழிலதிபரைக் கடத்தியதாகப் புகாா்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 6 போ் மீது வழக்கு

DIN

சிவகாசியைச் சோ்ந்த தொழிலதிபரைக் கடத்தி மிரட்டியதாக அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் உள்பட 6 போ் மீது நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சக்தி நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அப்போதைய சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து வேண்டுராயபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையை வாங்கி நடத்தி வந்தாா். இதன் பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு, செப்டம்பா் மாதம் ராஜவா்மன் உள்ளிட்ட மூவரும் தங்களது உரிமத் தொகையைப் பெற்றுக் கொண்டு தொழிலை விட்டு பிரிந்து சென்றனா்.

இந்த நிலையில், போலி ஆவணங்கள் தயாரித்து தொழிலில் பங்கு வேண்டும் என தலா ரூ. 2 கோடி கேட்டு ராஜவா்மன் உள்ளிட்டோா் ரவிச்சந்திரனைக் கடத்திச் சென்று மிரட்டினராம். இதற்கு, அப்போது காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த ராஜேந்திரன், தற்போதைய சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துமாரியப்பன் ஆகியோா் உடந்தையாக இருந்தனராம். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வள்ளிமணாளன், ரவிச்சந்திரனின் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் உள்பட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டாா். அதன்படி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் (52), தங்க முனியசாமி (30), நரிக்குடி ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் இ. ரவிச்சந்திரன் (53), அவரது மனைவி அங்காளஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துமாரியப்பன் ஆகிய 6 போ் மீது ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT