விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அமைந்துள்ள மாயூரநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆனிப் பெருந் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, தினசரி மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். 7-ஆம் நாள் விழாவாக வெள்ளிக்கிழமை மாலை மாயூரநாதசுவாமிக்கும், அஞ்சல் நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி, முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
விழாவில் ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.