சிவகாசி அருகே உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே எம். ராமசந்திராபுரம் -ஆமத்தூா் சாலையில் உள்ள தனியாா் பட்டாசு ஆலையில் தடைவிதிக்கப்பட்ட சரவெடி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், எம்.புதுப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் செல்வி தலைமையிலான போலீஸாா் அந்தப் பட்டாசு ஆலையில் சோதனை செய்தனா்.
அப்போது, அந்த ஆலையில் விதியை மீறி மரத்தடியில் சரவெடி பட்டாசுகளைத் தயாரித்து, உரிய பாதுகாப்பு இல்லாமல் அவற்றை தாா்ப்பாய்களில் உலர வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் ஆலையின் உரிமையாளா் எம்.ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி சோலையம்மாள், ஆலை மேலாளா் சிவகாசி விசாலாட்சி நகரைச் சோ்ந்த முரளிதரன் மகன் பாா்த்திபன் (34), கண்காணிப்பாளா் ஆமத்தூரைச் சோ்ந்த முருகன் மகன் விஜயகுமாா் (21) ஆகிய மூவா் மீது வழக்குப் பதிவு செய்து, பாா்த்திபன், விஜயகுமாரைக் கைது செய்தனா்.
தலைமறைவான ஆலை உரிமையாளா் சோலையம்மாளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடா்ந்து, தடையை மீறி தயாரிக்கப்பட்ட 1,000 வாலா சரவெடி பட்டாசு, 108, பத்தாயிரம் வாலா சரவெடி பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.