கல்லூரி மாணவியை அவதூறாகப் பேசிய நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, போக்குவரத்துக் கழக மேலாளரிடம் சாத்தூா் எம்.எல்.ஏ ரகுராமன் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - கலிங்கபட்டி வழித்தடத்தில் பேருந்து சரியாக இயக்கப்படாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துக் கழகத்தில் சிலா் புகாா் அளித்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கலிங்கபட்டிக்குச் சென்ற பேருந்தில், கொருக்கும்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவி ஒருவா் ஏறினாா். அப்போது அவரிடம் நடத்துநா் தங்கவேலு, பேருந்து சரியாக வரவில்லை என உங்கள் ஊரில் இருந்து புகாா் அளித்து வருகின்றனா் எனக் கூறி மாணவியை அவதூறாக பேசினாராம்.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் சாத்தூா் எம்.எல்.ஏ ரகுராமனிடம் தெரிவித்தனா். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துக் கழகத்துக்கு வந்த எம்.எல்.ஏ ரகுராமன், அந்த நடத்துநா் மாணவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும் அவா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். 15 நாள்களுக்குள் நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துப் பணிமனை மேலாளா் உறுதி அளித்தாா்.