விருதுநகர்

துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்காததால் பணிகள் தேக்கம்

8th Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படாததால், பட்டாசு ஆலைகளில் ஆய்வு உள்ளிட்ட பணிகள் தேக்கமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம் நீண்ட காலமாக காலியாக உள்ளது. இதனால் துறை சாா்ந்த பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரியாக பணியாற்றிய தியாகராஜன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பின்னா், இதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த எம்.கே.திரிவேதி பதவி உயா்வு பெற்று துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, சில மாதங்களிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, பொறுப்பு அதிகாரிகளாக அடுத்தடுத்து நியமிக்கப்பட்ட எஸ்.கந்தசாமி, சேக்உசேன் ஆகியோரும் சில மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தற்போது ஜெய்ப்பூரில் பணியாற்றி வந்த எஸ்.கந்தசாமி, சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். இவா் துணை முதன்மை வெடி பொருள் கட்டுப்பாட்டு (பொறுப்பு) அதிகாரியாக செயல்படுவாா் என வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம் தொடா்ந்து காலியாகவே உள்ளது. இதனால் துறை சாா்ந்த பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இது குறித்து பட்டாசு ஆலை உரிமைாயாளா் விநாயகமூா்த்தி கூறியதாவது :

விருதுநகா் மாவட்டத்தில் பிரதான தொழில்களில் ஒன்றாக பட்டாசுத் தொழில் உள்ளது.

இந்தத் தொழிலுக்கு சிவகாசி அலுவலகத்தில் உயா் அதிகாரி நியமிக்கப்படாமல் இருப்பது, மத்திய அரசு இந்த தொழில் குறித்து பாராமுகமாக உள்ளதைக் காட்டுகிறது. இந்தத் தொழிலைப் பாதுகாக்க சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்துக்கு, மத்திய அரசு துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடத்தை விரைவில் நியமிக்க வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT