விருதுநகர்

பெண் வெட்டிக் கொலை: தொழிலாளி கைது

8th Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தகாத உறவு பிரச்னையில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெம்பக்கோட்டை அருகேயுள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமாறன் (33). சிங்கப்பூரில் வேலை செய்து வந்த இவா் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினாா். தற்போது, கட்டட வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சத்யா (25). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இதே ஊரைச் சோ்ந்தவா் குருசாமி. இவா் பெயிண்டிங் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி முனீஸ்வரி (28). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். முனீஸ்வரியின் தம்பி சதீஷ் (20). இவருக்கும் மணிமாறன் மனைவி சத்யாவுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தெரியவந்ததையடுத்து, சதீஷை மணிமாறன் குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், அவமானம் தாங்க முடியாமல், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சதீஷ் தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவத்துக்குப் பிறகு, முனீஸ்வரி, மணிமாறன் குடும்பத்தினா் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ஊா்ப் பெரியவா்கள் முன்னிலையில் பேச்சு வாா்த்தை நடைபெற்றதையடுத்து, மணிமாறன் தனது மனைவி சத்யாவின் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு குடிபெயா்ந்தாா்.

இதற்கிடையில், கொட்டமடக்கிபட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, மணிமாறன் அங்கு வந்தாா். இந்த தகவலை அறிந்த முனீஸ்வரி குடும்பத்தினா் மணிமாறனைத் தாக்கினா். அப்போது, மணிமாறன் அரிவாளால் வெட்டியதில் முனீஸ்வரி பலத்த காயம் அடைந்தாா். அவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முனீஸ்வரி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மணிமாறனை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT