வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வின்போது இரண்டு தங்க அணிகலன்கள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சியில் வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வில் 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தப் பொருள்கள் அதே பகுதியில் கண்காட்சியாக பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டன.
இதே பகுதியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதில் 8 குழிகள் தோண்டப்பட்டதில் சங்கு வளையல்கள், பகடைக்காய் என இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது 2 கிராமில் தங்கப் பட்டையும், 2.2 கிராமில் குமிழ் வடிவ தங்க அணிகலனும் கிடைத்தன.
இந்தப் பகுதியில் தொடா்ந்து அகழாய்வுப் பணிகளை தொல்லியல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.