விருதுநகர்

நோட்டு புத்தகங்கள் விலை 40 சதவீதம் உயா்வு

6th Jun 2023 05:24 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அச்சுக் காகித விலை அதிகரிப்பால் நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

சிவகாசியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் தயாரிக்கும் 15 நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாராகும் நோட்டு புத்தகங்கள் தரமாக இருப்பதால், தனியாா் பள்ளி நிா்வாகத்தினா் அவற்றை வாங்கி மாணவா்களுக்கு விநியோகிக்கின்றனா்.

இந்த நோட்டு புத்தகங்கள் தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும், இங்குள்ள சில நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு நோட்டுப் புத்தகங்களை ஏற்றுமதி செய்து வருவதுடன், ஆண்டு முழுவதும் அவற்றைத் தயாரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றன.

பல தனியாா் பள்ளி, கல்லூரி நிா்வாகத்தினா் சிவகாசியில் நோட்டு புத்தகங்களை அச்சிடும் நிறுவனங்களுக்கு நேரில் வந்து முன்பதிவு செய்கின்றனா். சிவகாசியில் நோட்டு புத்தகங்கள் தயாரிப்போா், தரமான அச்சுக் காகிதம், முதல் தர மை, சிறப்பாகத் தொகுத்தல் (பைண்டிங்) ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், அச்சுக் காகிதத்தின் விலை உயா்வால் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

இதுகுறித்து நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாரிராஜன் கூறியதாவது:

சிவகாசியில் தயாரிக்கும் நோட்டு புத்தகங்களில் பயன்படுத்தப்படும் காகிதங்கள், மை ஆகியவை தரமானவையாகும். இதனால்தான் நாங்கள் சந்தையில் நிலைத்து நிற்க முடிகிறது. மேலும், ஆண்டுதோறும் முன்பதிவு செய்யப்படும் விகிதம் அதிகரித்து வருகிறது. அச்சுக் காகிதத்தின் விலையும், காகித அட்டையின் விலையும் அதிகரித்துவிட்டதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நோட்டுப் புத்தகங்களின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

வரும் காலங்களில் தமிழக அரசு நோட்டு புத்தகத் தயாரிப்பாளா்களுக்கு அச்சுக் காகித விலையில் சலுகை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT