ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பேரூராட்சியில் பொதுமக்களிடமிருந்து பயன்படுத்தப்பட்டப் பொருள்களை வாங்கி ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் மையத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழச்சிக்கு மம்சாபுரம் பேரூராட்சி உறுப்பினா் தங்கமாங்கனி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் மணிகண்டன், பேரூராட்சி உறுப்பினா்கள், பேரூராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.
பேரூராட்சி செயலா் மணிகண்டன் பேசுகையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன், மதுரை மண்டல உதவி இயக்குநா் ஆகியோரின் உத்தரவுப்படி, பேரூராட்சி சாா்பில் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், மறுசுழற்சி, மறு பயன்பாடு எனும் மூன்று கொள்கையின் அடிப்படை யில் இந்த மையம் தொடங்கப்பட்டது.
இங்கு பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள், துணிகள், மிதிவண்டி, பை, புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கலாம். இவற்றில் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருள்கள் பிரித்து எடுக்கப்பட்டு தேவையான ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நல்ல பொருள்கள் குப்பைக்கு செல்வதை தவிா்ப்பதுடன் அவை ஏழைகளுக்கு, பயனுள்ளதாக மாற்றப்படுகிறது எனத் தெரிவித்தாா்.