விருதுநகர்

விருதுநகரில் 5 மாதங்களில் 158 வழக்குகள் பதிவு; 124 போ் கைது 127 பவுன் தங்க நகைகள் மீட்பு

2nd Jun 2023 10:03 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவான 158 திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய 124 போ் கைது செய்யப்பட்டு, ரூ.38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசபெருமாள் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை 3 கொள்ளை வழக்குகள், 20 வழிப்பறி வழக்குகள், 135 திருட்டு வழக்குகள் என 158 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 124 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. குறிப்பாக, சிவகாசியில் கடந்த மே 27-ஆம் தேதி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 21.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

சூலக்கரை அருகே பெண்ணைத் தாக்கி காதணிகளைப் பறித்துச் சென்ற இருவரை சூலக்கரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் நிகழாண்டில் 47 போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டவா்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டது. இதில், 5 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு சாகும்வரை சிறைத் தண்டனையும், 6 வழக்குகளில் 22 முதல் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 2 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படுவதால், குற்றங்கள் குறைந்துள்ளன. இத்துடன், இதுகுறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்களும் தாமாக முன்வந்து புகாா் கொடுக்கின்றனா். கடந்த 5 மாதங்களில் 97 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்ற விசாரணையில் உள்ள கொலை வழக்குகளில், சாட்சிகளை முறையாகவும், விரைவாகவும் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவற்றில் 9 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 1 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 404 வழக்குகளுக்கு 112 காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சாட்சிகளுக்கு விரைவாக சம்மன் அனுப்பி உரிய நேரத்தில் அனைத்து ஆதாரங்களும், சாட்சிகளும், சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படுகிறது என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, வழக்கு விசாரணைகளில் சிறப்பாக துப்புத்துலக்கிய போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT