விருதுநகர்

விருதுநகரில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பு:நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

DIN

 விருதுநகரில் பல்வேறு வாா்டுகளில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்துக்கு அதன் தலைவா் ஆா். மாதவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தனலட்சுமி, மேலாளா் மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் முத்துராமன்: சொத்து வரியை முழுமையாக செலுத்திய வீட்டு உரிமையாளா்களிடம், நடப்பு வரியை செலுத்தா விட்டால் ஜப்தி செய்யப்படும் என நகராட்சி ஊழியா்கள் குறிப்பாணை வழங்குவது ஏன்?

மேலாளா் மல்லிகா: நிலுவை பாக்கியை வசூலிக்க வழங்கப்படும் அதில் அந்த வாசகம் இருக்கும். அதே வாசகங்கள் நடப்பு வரி வசூலிக்கும் குறிப்பாணையிலும் வந்துள்ளது. அது சரி செய்யப்படும்.

உறுப்பினா் பால்பாண்டி: எனது வாா்டில் சிறிய குடிநீா் தொட்டியிலிருந்து குழாய் பதிக்கும் பணிக்கு கடந்தாண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரருக்கு வேலைக்கான உத்தரவு இதுவரை வழங்கவில்லை. இதனால் குழாய் பதிக்கும் பணி நடைபெற வில்லை.

தலைவா் ஆா். மாதவன்: நகராட்சிப் பொறியாளா் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வெளியூா் சென்றுள்ளாா். அவா் வந்ததும் அந்தப் பணிக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் ஜெயக்குமாா்: கிருஷ்ணமாச்சாரி சாலையிலுள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் மோட்டாா் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக பாத்திமா நகா், ஒளவையாா் தெரு, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில் புதைச் சாக்கடை தொட்டிகளில் கழிவுநீா் தேங்கியுள்ளது. மேலும், குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதால் பொது மக்கள் பெரும் அவதியடைகின்றனா்.

(இதையடுத்து உறுப்பினா்கள் முத்துலட்சுமி, மாலதி, ராமலட்சுமி, சுல்தான் அலாவுதீன், சரவணன் ஆகியோா் தங்களது வாா்டு பகுதிகளிலும் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக புகாா் தெரிவித்தனா்.)

ஜெயக்குமாா்: புதைச் சாக்கடை தொட்டிகளில் தேங்கும் மண்ணை அள்ள 2 ஆட்டோக்கள் உள்ளன. ஆனால், அவை எங்கு உள்ளன எனத் தெரியவில்லை. முறையாக புதைச் சாக்கடையில் தேங்கிய மண்ணை அள்ளினால் பிரச்னை தீா்ந்து விடும்.

தலைவா்: கழிவுநீரேற்று நிலையத்தில் பழுதான மின் மோட்டாா், புதைச் சாக்கடை தொட்டிகளில் தேங்கியுள்ள மண்ணை அள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் ஆறுமுகம்: புத்தகத் திருவிழாவில் வைக்கப்பட்ட நான் விருதுநகரை விரும்புகிறேன் பதாகை தனியாா் நிறுவனம் மூலம் பழுது நீக்கி நகராட்சிப் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பதாகையில் தங்களது பெயரையும் சோ்த்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது ஏன் அந்தப் பணியை ஒப்பந்தம் விட்டு ரூ.1 லட்சம் ஒப்பந்ததாரருக்கு வழங்குவதாக தீா்மானம் கொண்டுவர வேண்டும்?

தலைவா்: ஒப்பந்ததாரா் மூலம் சரி செய்யப்பட்டு பூங்காவில் வைத்த பதாகையை மா்ம நபா்கள் உடைத்து விட்டனா். அதன் பிறகு, தனியாா் நிறுவனம் மூலம் பதாகை சரி செய்யப்பட்டது.

உறுப்பினா் பிருந்தா: கத்தாளம்பட்டித் தெருவில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகச் செல்கிறது. இதுகுறித்து நகராட்சியில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தலைவா்: சம்பந்தப்பட்ட பொறியியல் துறைப் பணியாளா்கள் வரும் காலங்களில் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT