விருதுநகர்

தொழிலாளி கொலை வழக்கு:4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

12th Jul 2023 04:46 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேலத் தெருவைச் சோ்ந்தவா் மாரி (48). கூலித் தொழிலாளி. இவரது மகளை கேலி செய்த அதே பகுதியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் ராஜ்குமாரை (29), மாரி கண்டித்தாா். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி ராஜ்குமாா், இவரது நண்பா்கள் பாண்டி (30), ஆட்டோ ஓட்டுநா் லிங்கம் (27), கூலித் தொழிலாளி வனராஜ் (24) ஆகியோா் சோ்ந்து மாரியைத் தாக்கினா். இதில் காயமடைந்த மாரி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாா், பாண்டி, லிங்கம், வனராஜ் ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் எம்.பிரித்தா குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாா், லிங்கம், வனராஜ் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், பாண்டிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT