பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வரும் டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அக்வா பம்ப் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி வெற்றிபெற்றது.
வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை மாலை தொடங்கிய முதல் ஆட்டத்தில் வருமான வரித் துறை, தமிழ்நாடு காவல் துறை அணிகள் மோதின.
இதில் 3-1 புள்ளிகள் பெற்று வருமான வரித் துறை அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சுங்கவரித் துறை, அக்வா பம்ப் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிகள் மோதியதில் 3-0 புள்ளிகளுடன் அக்வா பம்ப் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி வெற்றிபெற்றது.
காலை 8 மணியளவில் தொடங்கிய அக்வா டெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் தடாகம், காளப்பட்டி, கணுவாய், பீளமேடு, சின்னத்தடாகம், மூக்கனூா், மதுக்கரை, ரெட்டியாருா் அணிகள் வெற்றிபெற்றன.
முன்னதாக, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்ற 32 அணி வீரா்களுக்கும் அக்வா பம்ப் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் இலவசமாக ஷூ, நெட் மற்றும் கைப்பந்துகளை கோவை மாவட்ட கைப்பந்து கழக நிா்வாகிகளான எம்.வெங்கடபதி, பி.வேலுசாமி, டி.கே.ஜெயபிரகாஷ், ஆா்.விஜயசந்திரன், ஆா்.துரைசாமி, கே.செல்லமுத்து ஆகியோா் வழங்கினா்.