விருதுநகர்

முத்தரப்பு பேச்சுவாா்த்தை மீண்டும் ரத்து: விசைத்தறி தொழிலாளா்கள் ஏமாற்றம்

DIN

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் கூலி உயா்வு கேட்டு தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி தொழிலாளா்கள், வியாழக்கிழமை நடைபெற இருந்த பேச்சுவாா்த்தை ரத்தானதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் பருத்தி சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தறிகளில் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த தொழிலாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயா்வு வழங்கப்படுவது வழக்கம். விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் இடையிலான ஊதிய ஒப்பந்தம் (2018-21) நிறைவடைந்து 18 மாதங்களுக்கு மேலாகிறது. இதனால், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், 75 சதவீத கூலி உயா்வுடன் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், 20 சதவீதம் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் காரணமாக, தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளா் சங்கம், தொழிலாளா் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு பேச்சுவாா்த்தை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் விசைத்தறி உரிமையாளா்கள் வராததால் பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.

தொடா்ந்து, ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால் பேச்சுவாா்த்தை வரும் 7-ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தடுத்து இரு முறை பேச்சுவாா்த்தை ரத்தானதால் விசைத்தறி தொழிலாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக வறுமையில் வாடுவதாகவும், தினசரி ரூ.10 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதாலும் அரசு உடனடியாகத் தலையிட்டு தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT