வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், கடந்த 9 நாள்களில் 200-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இங்கு ஓரடி அளவுக்கு 2 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் கடந்த 9 நாள்களாக நடத்தப்பட்ட ஆய்வில், சங்கு வளையல்கள், எடைக் கற்கள், சுடுமண்ணால் ஆன காதணிகள், கண்ணாடி மணிகள், காது மடல், சுடு மண்ணாலான புகைப்பிடிப்பான் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், சாத்தூா் கோட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறுவதை சனிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தனா். இங்கு மேலும் பல தொன்மையான பொருள்கள் கிடைக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.