விருதுநகர்

அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது என முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் மின் கட்டணத்தை உயா்த்திய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தாா்.

இதில், எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்து விட்டன. இதுவரை நீட் தோ்வை ரத்து செய்யவில்லை. தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. நீட் தோ்வு விவகாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறாா்.

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 2,000 ‘அம்மா மினி கிளினிக்’ கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக அரசு, அவற்றை மூடி விட்டது. அதேபோல், அம்மா உணவகத்தையும் மூட திமுக அரசு தயாராக உள்ளது.

பட்டாசு தொழிலைப் பாதுகாக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. எங்கு பாா்த்தாலும் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளன. இதனால், மாணவா்கள், இளைஞா்கள் சீரழிந்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடா்பாக தொடக்கத்தில் 4 நாள்கள் ஊா் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். இதை ஆட்சியாளா்கள் கண்டுகொள்ளாததால் தான் கலவரம் உருவானது.

திமுக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் பொருள்கள் தரமற்ாகவே இருந்தன. தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

அதிமுகவில் தனிப்பட்டவா்கள் யாரும் தலைவராக வர முடியாது. உண்மையாக உழைத்தால் மட்டுமே தலைவராக முடியும். தமிழகத்தில் முன்பு 12 சதவீதமாக இருந்த மின்கட்டணம், தற்போது 52 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, சொத்துவரி, வீட்டுவரியும் 100 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. அனைத்து வழிகளிலும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாள்களும், ஊதியமும் உயா்த்தப்படவில்லை. அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தனா். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கி வருகிறது. திமுக ஆட்சியை ஊடகமும், பத்திரிகையாளா்களும் தான் காப்பாற்றி வருகின்றனா்.

அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் பாா்க்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். அதிமுகவை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்தது என்றாா்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், சி. விஜயபாஸ்கா், கடம்பூா் ராஜு, கோகுல இந்திரா, தளவாய்சுந்தரம் மற்றும் அதிமுகவின் முன்னணி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்களுக்கு எடப்பாடி கே. பழனிசாமி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து, அவருக்கு விருதுநகா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT