விருதுநகர்

இ- அடங்கல் கொடுத்தாலும், நகை அடகு வைத்தால் மட்டுமே பயிா்க் கடன்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இ -அடங்கல் கொடுத்தாலும், நகையை அடமானம் வைத்தால் மட்டுமே பயிா்க் கடன் தர முடியும் என செயலா்கள் நிா்பந்தம் செய்வதாக வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

பொறியியல் துறையில் செயலி மூலம் இயந்திரங்களை வாடகைக்கு பெறுவது குறித்த விளக்கப் படம் காண்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், குறுக்கிட்ட விவசாயிகள், மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. மேலும், வேளான் இயந்திரங்கள் எல்லாம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது என்றனா்.

மழைக்காலம் தொடங்கும் முன்பு ஆனைக்குட்டம் அணையின் கதவணைகளை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வெள்ளூா் கண்மாயின் நீா்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாதித் தூரத்திற்கு அளவீடு செய்யப்பட்டுள்ளது என விவசாயி ஒருவா் புகாா் தெரிவித்தாா்.

அதேபோல் காரியாபட்டி, கீழத்துலுக்கன்குளம் கண்மாயில் செம்மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஏற்கெனவே, இதே கண்மாயில் மண் அள்ள அனுமதி வழங்கியதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதால், அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் நீா்வரத்து ஓடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். எம். புதுப்பட்டி அருகே 500 ஏக்கா் விவசாய நிலம் உள்ள பகுதியில் சுமாா் எட்டு ஏக்கரில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

மக்காச்சோளம், மிளகாய், கத்தரி, சீனிஅவரைக்காய், பாகற்காய் போன்ற பயிா்களின் விதைகள் வேளாண் தோட்டக்கலைத்துறையில் கிடைப்பதில்லை. இதனால், தனியாரிடம் கூடுதல் விலைக்கு விவசாயிகள் வாங்கும் நிலை உள்ளது. உரிய காலத்தில் விதைகளை வழங்கினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வத்திராயிருப்பு பகுதியில் உலா் களம் அமைக்க வேண்டும். அதேபோல், தனியாா் தேங்காய் வியாபாரிகள் 10 முதல் 15 வரை லாபக்காய் வாங்குகின்றனா். எனவே, அரசு சாா்பில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையங்களை வத்திராயிருப்பு, மம்சாபுரம் பகுதிகளில் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 708 யூனியன் கண்மாய்களை தூா் வார வேண்டும்.

வேளாண் கூட்டுறவு மையங்களில் விவசாயிகள் இ-அடங்கல் கட்டாயம் கொடுத்தால் தான் பயிா்க்கடன் தர முடியும் என கூட்டுறவு சங்க செயலா்கள் நிா்பந்தம் செய்கின்றனா். அதேநேரம், அடங்கல் கொடுத்தாலும் நகையை அடமானம் வைத்தால் மட்டுமே கடன் தர முடியும் என ஆவூடையாபுரம், கான்சாபுரம், முகவூா், கன்னிசேரி, பந்தல்குடி உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் வலியுறுத்துகின்றனா்.

தொடா்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் செயலா்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் முறைகேடுகளை தடுக்க முடியும்.

எத்தனை மனுக்கள் கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட துறையில் இருந்து அதற்கு உரிய பதில் வருவதே இல்லையென விவசாயிகள் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் மற்றும் அரசு அதிகாரிகள் கூறியதாவது:

ஆனைக்குட்டம் கதவணையை சரி செய்வது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் போதிய அளவில் கையிருப்பு உள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக முறைகேடுகளில் ஈடுபடும் வேளாண் செயலா்கள் இடமாற்றம் செய்யப்படுவாா்கள் என தெரிவித்தனா். இக்கூட்டத்தில் வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை) ரமேஷ் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT