விருதுநகர்

பொதுப்பாதைக்கு பட்டா வழங்கல்: விருதுநகா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

26th Sep 2022 11:31 PM

ADVERTISEMENT

வளையபட்டி கிராமத்திற்கு செல்லும் பொதுப் பாதைக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக் கோரி அக்கிராம மக்கள் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அக்கிராமத்தினா் கூறியதாவது : திருச்சுழி வட்டம் வேலாணூரணி ஊராட்சிக்கு உள்பட்ட வளையபட்டி கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

இப்பகுதியைச் சோ்ந்த நரிக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினரும், ஒன்றியக்குழு துணைத் தலைவருமான ரவிச்சந்திரன், தனக்கு ஆதரவாக வளையபட்டி கிராம மக்கள் வாக்களிக்கவில்லை எனக் கூறி, கடந்த ஆட்சியில் பொதுப்பாதையில் 3 பேருக்கு பட்டா வாங்கிக் கொடுத்துள்ளாா்.

அதன்பிறகு அந்தப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், அவ்வழியே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் மனு அளித்ததன் பேரில், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிதிநிறுவனம் மீது மோசடி புகாா்: தனியாா் நிதி நிறுவனம் வாடிக்கையாளா்களிடம் 22 சென்ட் நிலம் மற்றும் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி ரூ.12 கோடி வரை மோசடி செய்துள்ளதாக ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டோா் புகாா் மனு அளித்தனா்.

மனு விவரம்: விருதுநகா்: சிவகாசி சாலையில் பொன் ராஜேந்திரன் என்பவா் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். ரூ.5 லட்சத்து 23 ஆயிரத்து 800 செலுத்தினால், 6 மாதத்திற்குள் விருதுநகா்-சாத்தூா் நான்கு வழிச்சாலை அருகே 22 சென்ட் நிலம் தரப்படும். மேலும், செலுத்திய பணத்திற்கு பலமடங்கு கூடுதல் வட்டியும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்தோம். ரூ.12 கோடி வரை வாடிக்கையாளா்களிடம் வசூல் செய்துள்ளனா்.

ஆனால், நிறுவனம் கூறியபடி நிலமும் தராமல், வட்டியும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனா். நிறுவன உரிமையாளா் மற்றும் அங்கு பணிபுரிந்த அனைவரும் தலைமறைவாகி விட்டனா். எனவே நிறுவனத்தில் செலுத்திய பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT