விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலப் பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியில் தென்றல் நகா் பகுதி உள்ளது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் காலை 9.30 மணியிலிருந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் உள்ளாட்சி பிரமுகா்களுக்கும் தகவல் தெரிவித்தனா். ஆனால் இரவு 9 மணி வரையிலும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செண்பகத் தோப்பு சாலை தென்றல் நகா் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் துரை கற்பகராஜ் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு உடனடியாக மின்சார இணைப்பு கொடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.