விருதுநகர்

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்

24th Sep 2022 10:42 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகேயுள்ள சஞ்சீவி மலையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆா்வலருமான போ.கந்தசாமி தலைமையில் திருச்சி பாலபாரதி, பாலமுரளி ஆகியோா் சஞ்சீவி மலைப் பகுதியில் களப்பணி மேற்கொண்டனா். இதுகுறித்து பேராசிரியா் கந்தசாமி சனிக்கிழமை கூறியதாவது: சஞ்சீவி மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன.

பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போன்றும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமா்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. இரண்டு மூன்று பேருக்கு மேல் குழுவாக நடன காட்சிகள் போன்றும் வரையப்பட்டுள்ளன. விலங்குகள் மற்றும் மனிதா்கள் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. விலங்குகள் மற்றும் மனிதனின் சண்டைக் காட்சிகளும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பல காலகட்டங்களில் இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளன. எனவே இப்பாறை ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக இந்த ஓவியங்கள் வரையறுக்கப்படுகின்றன.

சஞ்சீவி மலை தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சஞ்சீவி மலை பாறை ஓவியங்கள் பெருங்கற்கால பண்பாட்டோடு தொடா்புடையதாக கருதப்படுகிறது. முருகன் கோயில் அருகே உள்ள பாறையில் அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழுக் கோட்டுருவம் மிக நோ்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில் சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் அமைந்துள்ள இப்பாறை ஓவியங்களை தொல்லியல் துறையினா் ஆய்வு செய்து பாதுகாக்க முன்வர வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT