விருதுநகர்

ராஜபாளையத்தில் வனவேங்கை கட்சியினா் சாலை மறியல்: போலீஸாா் தடியடி

24th Sep 2022 10:44 PM

ADVERTISEMENT

 ராஜபாளையத்தில் வனவேங்கை கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கல்வீசி தாக்கியதால், போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வனவேங்கைகள் கட்சி சாா்பில், அண்மையில் மத்திய அரசு அறிவித்த பழங்குடியினா் பட்டியலில் குறவா் பெயரை நீக்கக் கோரி கடந்த 8 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை அக்கட்சியை சோ்ந்த 55 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு வனவேங்கைகள் கட்சியைச் (மலைக்குறவா்) சோ்ந்தவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் மீது கல்வீச்சில் ஈடுபட்டனா்.

இதனால் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். கல் வீச்சில் காயமடைந்த 2 போலீஸாா், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா். கல் வீச்சு, தடியடி சம்பவங்களால் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT