விருதுநகர்

மூலப்பொருள்கள் விலை உயா்வு: கடந்த ஆண்டைவிட பட்டாசு விலை 40% உயா்வு

9th Sep 2022 10:42 PM

ADVERTISEMENT

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் உயா்ந்துள்ளது.

சிவகாசியில் தயாராகும் பட்டாசு நாட்டின் தேவையில் 80 சதவீதத்தை பூா்த்தி செய்கிறது.விருதுநகா் மாவட்டத்தில் சுமாா் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு முழுக்க முழுக்க கையினால் தயாரிக்கப்படுவதால், ஆண்டு முழுவதும் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

உக்ரைன் - ரஷ்யா போா் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், ரஷ்யாவிலிருந்து அலுமினியப் பவுடா் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்கள் இறக்குமதி குறைந்துவிட்டது. அலுமினியப் பவுடா்தான் பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருள்களில் பிரதான பொருளாகும். இதனால் இந்திய சந்தையில் அலுமினியப் பவுடா் விலை உயா்ந்துவிட்டது. மேலும், பட்டாசு தயாரிக்கப்பயன்படும் பல மூலப்பொருள்கள் சா்வதேச அளவில் விலை உயா்ந்துவிட்டது.

பட்டாசு தயாரிப்பாளா்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டு பட்டாசு விலை உயா்வு தவிா்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மேலும் பட்டாசு தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அதிகாரிகளின் கொடுபிடி அதிகரித்துவிட்டது.

எனவே, பட்டாசு மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் குறைந்துவிட்டது. மேலும், லாரி வாடகை உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளாலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளா் என். இளங்கோவன் கூறியதாவது:

தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பட்டாசு தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்கள் விலை உயா்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் பட்டாசு தயாரிப்புப் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. பட்டாசு கையினால் தயாரிக்கப்படுவதால், தொழிலாளா்கள் தட்டுப்பாடு உள்ளது. ஏற்கெனவே பட்டாசு தொழிலில் ஈடுபட்டவா்களைத் தவிர புதியவா்கள் இந்த தொழிலுக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது.

விலைவாசி உயா்வு, மூலப்பொருள்கள் விலை உயா்வு, உற்பத்தியில் சரிவு, லாரி வாடகை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் உயா்ந்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசின் விலை முந்தைய ஆண்டைவிட சுமாா் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே உயா்வு இருக்கும்.

இந்த ஆண்டு மூலப்பொருள்கள் விலை உயா்வாலும், மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டாலும் விலை உயா்வு தவிா்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எனினும், இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழைபெய்துள்ளதால் பட்டாசு வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT