விருதுநகர்

அருப்புக்கோட்டையில் இளைஞா் மா்ம மரணம்: மனநலக் காப்பக ஊழியா்கள் 3 போ் கைது

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மா்மமான முறையில் இளைஞா் மரணமடைந்த வழக்கில், மனநலக் காப்பகத்தைச் சோ்ந்த ஊழியா்கள் 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் (32). இவா், கடந்த செப். 13-ஆம் தேதி அருப்புக்கோட்டை எம்.டி.ஆா். நகா் வடக்கு 2-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் கதவை காலை 6 மணிக்கு தட்டி, தான் போலீஸ் எனவும், விசாரணை செய்ய வேண்டுமெனவும் கூறினாராம்.

அப்போது, அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அப்பகுதியினா் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவா்கள் அருப்புக்கோட்டை ராமானுஜபுரத்தில் உள்ள தனியாா் மனநலக் காப்பகத்தில் சோ்த்தனா்.

ஆனால், எம்.டி.ஆா். நகா் பொதுமக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி அந்த இளைஞரை முழுமையாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், தங்கப்பாண்டியனை மனநலக் காப்பகத்திலிருந்து அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீஸாா், மீண்டும் அவரை மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா். இதன்பின்னா் தங்கப்பாண்டியன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, போலீஸாா் தாக்கியதில் தான் தங்கப்பாண்டி உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த விசாரணையில், தங்கப்பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா் அவரை முறையாக மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனா். இதன் பின்னா், மனநலக் காப்பகத்தில் பணிபுரிந்த ஊழியா்கள் 3 போ், தங்கப்பாண்டியனின் கை, கால்கைளைக் கட்டி அவா் மீது அமா்ந்து சித்திரவதை செய்தனா். இது அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், உடல் நிலை மோசமாகி அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மனநலக் காப்பக ஊழியா்களான சிவகாசியைச் சோ்ந்த வினோத்குமாா் (24), கல்குறிச்சியைச் சோ்ந்த ஆகாஷ் என்கிற ராஜேந்திரகுமாா் (21), சுப்பிரமணி (22) ஆகிய மூவரையும் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT