விருதுநகர்

சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

7th Oct 2022 11:10 PM

ADVERTISEMENT

சாத்தூா் பகுதியில் சுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாத்தூா் பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலேயே உணவகங்கள் இருந்தன. தற்போது சாத்தூா் பிரதான சாலை, புறவழிச்சாலையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகள் அதிகரித்துள்ளன. இதில், சாத்தூா் பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களின் அருகே முழுநேரமாகவும், இரவு நேரம் மட்டும் இயங்கும் உணவகங்கள் உள்ளன. இந்நிலையில், சாத்தூா் நகருக்குள் உள்ள உணவகங்களிலும், புறவழிச்சாலையில் உள்ள உணவகங்களிலும் தயாரிக்கப்படும் உணவு வகைகள் சுகாதாரமற்ற நிலையிலும், காலாவதியானவையாகவும் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதே நிலை சாலையோரங்களில் உள்ள துரித உணவகங்களிலும் உள்ளது என அவா்கள் கூறுகின்றனா். இதனால் இந்த உணவகங்களில் சாப்பிடுபவா்களுக்கு உடல் உபாதைகளும், பல்வேறு நோய்களும் ஏற்படுவதாகவும் அவா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே சாத்தூரில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சுகாதாரமான உணவு வகைகள் விற்கப்படுவதை உறுதி செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சாத்தூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராம் கூறியதாவது: விலைவாசி ஏற்றத்தால் பலா் உயா்தர உணவகங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதில், சாமானிய மக்கள், விலை குறைவாக உள்ள சாலையோரக் கடைகளையே நாடுகின்றனா். ஆனால் அங்கு தரமற்ற உணவு வகைகள், சுகாதாரமற்ற சூழலில் விற்கப்படுவதால் நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் இந்த உணவகங்களை முறையாக சோதனை செய்வதில்லை. எனவே அதிகாரிகள் இந்த உணவகங்களில் சோதனை நடத்தி தரமான உணவு வகைகள் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விரைவில் உணவகங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT