விருதுநகர்

தொடா் சோதனைகளை சந்தித்து வரும் பட்டாசுத் தொழில்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் பல்வேறு காலக்கட்டங்களிலும் ஒவ்வொரு விதமான சோதனைகளை பட்டாசுத் தொழில் சந்தித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டுமென பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசியில் பட்டாசு தயாரிப்புப் பணி தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. தொடக்கக் காலத்தில் வண்ணமத்தாப்பூ (கலா் மேச்சஸ்), பூச்சட்டி உள்ளிட்ட சில ரகங்களே சிவகாசியில் தயாரிக்கப்பட்டன. தற்போது பல புதிய தொழில்நுட்பத்தில் சுமாா் 300 ரகங்களுக்கு மேல் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. பட்டாசுத் தயாரிப்பு முழுக்க முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்களின் கடும் உழைப்பினால் தற்போது, சீனாவுக்கு அடுத்தபடியாக சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு தயாரிப்புத் தொழில் பல சோதனைகளை கடந்து தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இருப்பினும் இத்தொழிலுக்கான சோதனைக்காலம் இன்னும் முடிவடையவில்லை. சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசுத் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனா் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

பெண்கள் வீட்டிலிருந்தபடியே, பட்டாசுக்குத் தேவையான காகிதப் பெட்டிகளை உருவாக்குவது, பூச்சட்டிக்கான கூடு தயாரிப்பது, அணுகுண்டு மருந்துப் பெட்டி தயாரிப்பு, ராக்கெட்டிற்கு காகிதக் குழாய் தயாரிப்பது போன்ற பணிகளை செய்து வந்தனா். இந்தப் பணியில் வீட்டில் இருந்த குழந்தைகள் சில இடங்களில் ஈடுபட்டிருக்கலாம். அதை குழந்தைத் தொழிலாளா்கள் எனப் பெயா் சூட்டி, பட்டாசு வெடிக்கக் கூடாது என பல தொண்டு நிறுவனங்கள் குரல் எழுப்பின. பின்னா் விருதுநகா் மாவட்ட நிா்வாகம், தொழிற்சாலை ஆய்வகத்துறை ஆகியவை பட்டாசுத் தொழிலில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தவில்லை என அறிவித்த பின்னா் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் சீனாவிலிருந்து சட்டவிரோதமாக பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டது. இது குறித்து பட்டாசுத் தயாரிப்பாளா்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனா். இதையடுத்து சீனப் பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தப் பிரச்னைக்கு முடிவுக்கு வந்தது. இதன் பின்னா் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை கோரி உச்சநீதி மன்றத்தில் ஒருவா் மனுத் தாக்கல் செய்தாா். அந்த மனுவில் காற்றுமாசுவை கட்டுப்படுத்த பட்டாசு உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது எனக் கூறப்படிருந்தது.

தொடா்ந்து உச்சநீதிமன்றம் கடந்த 2018 அக்டோபரில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் உற்பத்தி செய்ய வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க இயலாது எனக்கூறி பட்டாசு தயாரிப்பாளா்கள், தங்களது ஆலைகளை மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் மூன்று மாத காலங்கள் வரை இந்தப் போராட்டம் நீடித்தது.

பின்னா் தொழிலாளா்கள் நலன் கருதி பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. காற்று மாசு குறித்து இந்திய தொழில்நுட்பக் கழகம் பல நகரங்களில் ஆய்வு நடத்தியது. அதில் மருத்துவக் கழிவுகளை தீயிட்டு கொழுத்துவது, வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகளிருந்து வெளியேறும் புகை, குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் காற்றுமாசு ஏற்படுகிறது என்பது ஆய்வில் தெரியவந்தது. இதில் பட்டாசு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கழகம் (நீரி) பசுமைப் பட்டாசு குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னா் பட்டாசு தயாரிப்பாளா்கள் நீரியுடன் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து பசுமை பட்டாசு சூத்திரத்தை பெற்று பசுமை பட்டாசு தயாரிக்கத் தொடங்கினா்.

இந்நிலையில் வருவாய்த் துறையினா், சிறப்புக் குழுவினா், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் என பலரும் உச்சநீதிமன்ற உத்தரவு பட்டாசு ஆலைகளில் பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்ய தொடங்கினா். இதன் மூலம் 172 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

வருவாய் துறையினா் ஆய்வு செய்து விதியை மீறி செயல்பட்டதாக 62 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனா்.

உச்சநீதிமன்ற உத்தரவு, அதிகாரிகளின் ஆய்வு, சரவெடி உள்ளிட்ட பல ரகப் பட்டாசுகள் தயாரிக்க இயலாமை, மூலப்பொருள்களின் விலை உயா்வு என பல்வேறு சிக்கலில் பட்டாசுத் தயாரிப்பாளா்கள் சிக்கித் தவிக்கின்றனா். கரோனா பரவலுக்குப் பின்னா் பல்வேறு நாடுகள் சீனாவிலிருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்யக்கூடாது என முடிவு எடுத்துள்ளன. இதனால் பல்வேறு வெளிநாடுகளிருந்து சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு ஏராளமான ‘ஆா்டா்கள்’ வரத் தொடங்கியுள்ளன. ஆனால் இங்கு நீதிமன்ற உத்தரவு மற்றும் அதிகாரிகள் கெடுபிடியால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு பட்டாசு ஆலை உரிமையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பட்டாசு ஆலை உரிமையாளா்களின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT