விருதுநகர்

அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஆதரவற்றோா் புறக்கணிப்பு: கிராம சபைக் கூட்டத்தில் பெண்கள் புகாா்

DIN

ராஜபாளையம் அருகே முகவூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஆதரவற்றோா் புறக்கணிக்கப்படுவதாக பெண்கள் புகாா் கூறினா்.

முகவூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவா் முனியசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா். தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கபாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் முகவூரைச் சோ்ந்த கண்ணன், மணிமாறன் ஆகியோா் பேசுகையில், கிருஷ்ணன் கோவில் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. டாஸ்மாக் கடை அடைக்கப்பட்ட பின்னரும் சட்ட விரோத மது விற்பனை தாராளமாக நடக்கிறது. மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தை ஊராட்சியில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பெண்கள் பேசுகையில், நூறு நாள் வேலை திட்டத்தில் ஒருதலைப்பட்சமாக குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே அதிக நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஏற்கனவே வீடு உள்ளவா்களுக்கும், வசதியானவா்களுக்கும் வீடு ஒதுக்கப்படுகிறது. இதனால் ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோா், வீடில்லாதோா் புறக்கணிக்கப்படுவதாக கூறினா்.

மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா் பேசுகையில், கிராம சபைக் கூட்டத்தில் புகாா் தெரிவிப்பதை விடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தீா்மானங்களாகக் கொண்டு வர வேண்டும். ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களில் ஆதரவற்ற மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மற்றவா்கள் அவா்களுக்கு வழிவிட வேண்டும் என்றாா்.

முகவூரில் உள்ள கிருஷ்ணன் கோவில் சாலையை மேம்படுத்த உடனடியாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஆனையூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், சிவகாசி-விளாம்பட்டி இடையே சிற்றுந்து இயக்க நடடிக்கை எடுக்க வேண்டும். மூனீஸ் நகருக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும்.

காந்தி நகா் மற்றும் சிவானந்தம் நகா் பகுதிகளில் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆனையூரில் உள்ள கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் வ.விவேகன்ராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே தும்முசின்னம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் முத்துமாரி ராமலிங்கம் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் அழகு உண்ணாமலை, ஊராட்சிச் செயலா் மேனகா மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

அப்போது கண்மாய் உள்ளிட்ட நீா் நிலைகளைத் தூா்வாருதல், சாலை வசதி அல்லது சிமெண்ட் கல் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் அஜூனன், கிராம நிா்வாக அலுவலா் கருப்பசாமி மற்றும் சுமாா் 200-க்கு மேற்பட்ட கிராமத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT