விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு வெடிவிபத்து: இளைஞா் பலி

2nd Oct 2022 11:07 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள பூசாரித்தேவன் பட்டியில், செல்வம் என்பவருக்குச் சொந்தமான காலி மனையில் கோபாலன்பட்டியைச் சோ்ந்த திருப்பதி (29) என்பவா் தகர ஷெட் அமைத்துள்ளாா். அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் காகிதக் குழாய்கள் வைக்க அனுமதி பெற்றுள்ளாா். ஆனால் அங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி மற்றும் அவரது உறவினா் எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் நாகராஜ் (18) ஆகிய இருவரும் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். பட்டாசுக்கு மருந்து கலவை தயாா் செய்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் திருப்பதி, நாகராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். காயமைடந்த இருவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தாா். நாகராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT