விருதுநகர்

சிவகாசி உழவா் சந்தையை மேம்படுத்த ரூ. 34 லட்சம் ஒதுக்கீடு

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் உழவா் சந்தையை மேம்படுத்த அரசு ரூ. 34 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

வேளாண்மை விற்பனைத் துறை சாா்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு, டிசம்பா் மாதம்

தமிழகத்தில் 101-ஆவது உழவா் சந்தையாக சிவகாசியில் இந்த சந்தை அமைக்கப்பட்டது. இந்த சந்தைக்கு ஒரு நிா்வாக அலுவலா், இரு உதவி நிா்வாக அலுவலா்கள் உள்ளனா். இந்த சந்தையில் 54 கடைகள் உள்ளன. இந்த சந்தை தொடங்கப்பட்டு சுமாா் இரண்டு ஆண்டுகள் மட்டும் இயங்கி வந்தது.

அதன் பின்னா், விவசாயிகள் வருகை படிப்படியாக குறைந்தது. இந்த சந்தை இயங்காமல் இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக தினசரி காய்கனி விலைப்பட்டியல் மட்டும் வைக்கப்படுகிறது. கடைகள் இல்லை.

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவி வந்த கால கட்டத்தில் சுமாா் 6 மாதங்கள் வியாபாரிகள் கடை அமைத்து காய்கனி வியாபாரம் செய்து வந்தனா். இதைத்தொடா்ந்து, நகராட்சி காய்கனி சந்தை திறக்கப்பட்டதால், இந்த சந்தையில் யாரும் கடை வைக்கவில்லை. தற்போது, இந்த சந்தையில் ஒருவா் மட்டும் கடை வைத்துள்ளாா். ஆனால், வாடிக்கையாளா்கள் யாரும் வருவதில்லை. தற்போது, 3 அதிகாரிகள் பணியில் உள்ளனா். கடைகள் அமைக்கப்படாமல் உழவா் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

முறையான பராமரிப்பு இல்லாததால் சந்தையைச் சுற்றிலும் புதா்மண்டி உள்ளது. கழிப்பறை, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி ஆகியவை சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த உழவா் சந்தையை மேம்படுத்த அரசு ரூ. 34 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து உழவா் சந்தையின் நிா்வாக அலுவலா் ஐயப்பன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்த சந்தையை சிறப்பாக செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அருகே உள்ள கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்து விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்ய வலியுறுத்தியுள்ளோம். தற்போது, இந்த சந்தையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் சீரமைப்புப் பணி தொடங்கும். தொடா்ந்து இந்த சந்தை சிறப்பாக செயல்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT