சாத்தூா் அருகே சொத்துத் தகராறில் அண்ணனை குத்திக் கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஓ. மேட்டுப்பட்டி வைரவ சுவாமி கோவில் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன்கள் பொன்ராஜ்(58), மொட்டையசாமி (55). இதில், மொட்டையசாமி கூலித் தொழிலாளி. பொன்ராஜ் மிக்சி, கிரைண்டா், மின்விசிறி உள்ளிட்டவற்றை பழுது நீக்கும் கடை வைத்திருந்தாா். சகோதரா்கள் இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததால், அதுதொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், பொன்ராஜ் கடைக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற மொட்டையசாமி அவருடன் தகராறில் ஈடுபட்டு, பொன்ராஜை கத்தியால் குத்தினாா். இதில், பலத்த காயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் பொன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, மொட்டையசாமியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.