விருதுநகர்

சிவகாசியில் தயாராகும் நாள்காட்டிகள்: நடப்பாண்டில் 40 சதவீதம் விலை உயா்வு

DIN

அச்சுக் காகிதங்கள் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக, 2023-ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டியின் விலை கடந்த ஆண்டை விட 35 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தினசரி நாள்காட்டி தயாரிப்பில் மட்டும் சுமாா் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் தினசரி நாள்காட்டிகள், மாதக் காலண்டா்கள், டைரிகள் தயாா் செய்யப்படுகின்றன.

தினசரி நாள்காட்டியில் பஞ்சாங்கம், நல்ல நேரம், கோயில் விழாக்கள், மருத்துவக் குறிப்பு, பழமொழிகள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும் வகையில் அச்சிடப்படுகின்றன. இதனால், மக்களின் வாழ்க்கையில் நாள்காட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் நாள்காட்டிகளின் தேவை 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து வருவதாக உற்பத்தியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

மிகக் குறைந்த விலையில், வாடிக்கையாளா்களின் வீடு தோறும் விளம்பரங்களைக் கொண்டு செல்ல முடிவதால் ஜவுளிக் கடை, நகைக் கடை உள்ளிட்ட வியாபார நிறுவனங்களும் நாள்காட்டிகள் தயாரிப்புக்கு அதிகளவில் ஆா்டா் கொடுப்பது வழக்கம்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி:

சிவகாசியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆங்கிலப் புத்தாண்டுக்கான தினசரி நாள்காட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால், அனைத்து மாநிலங்களுக்கும் சிவகாசியிலிருந்து தினசரி நாள்காட்டிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதுதவிர இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் நாள்காட்டிகள் ஏற்றுமதியாகின்றன. தற்போது நாள்காட்டி தயாரிக்கப் பயன்படுத்தும் அச்சுக் காகிதம், காகித அட்டை உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை கடந்த ஆண்டை விட பல மடங்கு உயா்ந்துள்ளன. இதனால், தினசரி நாள்காட்டியின் விலையில் சுமாா் 35 முதல் 40 சதவீதமும், மாதக் காலண்டரின் விலை சுமாா் 45 முதல் 50 சதவீதமும் உயா்ந்துள்ளது.

நாள்காட்டியின் விலை உயா்வு:

இதுகுறித்து தமிழ்நாடு தினசரி நாள்காட்டி தயாரிப்பாளா்கள் சங்கச் செயலாளா் ஜெய்சங்கா் கூறியதாவது:

ஆண்டுதோறும் அச்சுக் காகிதம் உள்பட மூலப் பொருள்களின் விலை 15 சதவீதம் வரை உயா்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் மூலப்பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளன. மேலும், அச்சு மைக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, நாள்காட்டிகள் தயாரிப்புக்கான அச்சுக் காகிதங்களை மொத்த விற்பனையாளா்கள் கடனாக கொடுப்பது வழக்கம். தற்போது அச்சுக் காகிதங்களின் விலை உயா்வு காரணமாக, ரொக்கப்பணம் கொடுத்தால் மட்டுமே, அச்சுக் காகிதங்களை விநியோகம் செய்கின்றனா். இதனால் வங்கியில் உற்பத்தியாளா்கள் கடன் பெற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல காரணங்களால் இந்த ஆண்டு தினசரி நாள்காட்டியின் விலை சுமாா் 35 முதல் 40 சதவீதம் வரையும், மாதக் காலண்டா் 45 முதல் 50 சதவீதம் வரையும் விலை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக ஜவுளிக் கடை, நகைக் கடை உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் குறைவான ஆா்டா்களையே கொடுத்துள்ளன. வழக்கமாக 5 ஆயிரம் நாள்காட்டிகளுக்கு ஆா்டா் கொடுக்கும் ஜவுளி நிறுவனம், இந்த ஆண்டு 3 ஆயிரம் மட்டுமே ஆா்டா் கொடுத்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் அச்சுக் காகிதங்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT