விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மா மரங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு பகுதியில் மாமரங்களை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சிங்கம்மாள்புரம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த 3 நாள்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. அந்த யானை இரவு நேரங்களில், மாந்தோப்புகளில் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

இதுதொடா்பாக, விவசாயிகள் அளித்த புகாரையடுத்து, திங்கள்கிழமை கிராம நிா்வாக அலுவலா் வேலாயுதம், தோட்டக்கலை அலுவலா் கண்ணன், வருவாய்த் துறையினா் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து சேத அளவை மதிப்பீடு செய்தனா்.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த விவசாயி பெருமாள் கூறியதாவது:

ADVERTISEMENT

செண்பகத்தோப்பு, பேச்சியம்மன் கோயில், வாழைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை சிங்கம்மாள்புரம் பகுதியில் காட்டு யானை நூற்றுக்கு மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளன. யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT