விருதுநகர்

தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்

28th Nov 2022 12:04 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகேயுள்ள வதுவாா்பட்டியில் தனியாக வசித்து வருபவா் பாக்கியராஜ் (63). இவரது மகன் குருமூா்த்தி (35), வாழ்வாங்கி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

புதிதாக டிராக்டா் வாங்கிய பாக்கியராஜ், அதை மகன் குருமூா்த்தியின் பராமரிப்பில் விட்டு வாடகைக்கு விடுமாறு கூறினாா். ஆனால், குருமூா்த்தி அந்த டிராக்டரை வாடகைக்கு விட்ட பணத்தை தானே வைத்துக்கொண்டு வீண் செலவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த பாக்கியராஜ், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைப்பேசியில் தொடா்பு கொண்டு மகனது தவறைத் தட்டிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த குருமூா்த்தி தந்தை பாக்கியராஜ் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, பாக்கியராஜ் வீட்டுக் கதவை உள்புறம் தாழிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாா். குருமூா்த்தி கதவைத் தட்டியும், தந்தை திறக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த குருமூா்த்தி பெட்ரோலை வீட்டுக் கதவின் கீழ் இடைவெளி வழியாக ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதில், பாக்கியராஜ் பலத்த தீக்காயம் அடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு, அவா் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாக்கியராஜ் அளித்தப் புகாரின் பேரில் சனிக்கிழமை இரவு பந்தல்குடி போலீசாா் வழக்குப் பதிந்து, குருமூா்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT