ராஜபாளையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் இமானுவேல் (44). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு, மே 2-ஆம் தேதி 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இமானுவேலை கைது செய்தனா்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூா்ணஜெயஆனந்த், குற்றஞ்சாட்டப்பட்ட இமானுவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தாா்.