சிவகாசியில் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் திருட முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி சாமிபுரம் காலனியைச் சோ்ந்த ரத்தினக்குமாா் மனைவி உமாமகேஸ்வரி (33). இவா், தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா். இரு சக்கர வாகனத்தை பள்ளி வளாகத்தில் நிறுத்திவிட்டு, குழந்தைகளை வகுப்பறையில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தின் இருக்கையின் கீழே உள்ள பெட்டியை போலி சாவியை வைத்து ஒருவா் திறந்து அதிலிருந்த கைப் பையை திருட முற்சித்தாா். பின்னா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை உமாமகேஸ்வரி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அவா் சிவகாசி நாவெட்டிநாடாா் தெரு ராஜமணிக்கம் மகன் சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தனா்.