விருதுநகர்

காரியாபட்டி அருகே அரசுக்குச் சொந்தமான 369 ஏக்கா் நிலம் தனி நபருக்கு பத்திரப் பதிவு

27th May 2022 10:31 PM

ADVERTISEMENT

காரியாபட்டி பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமாா் 369 ஏக்கா் நிலத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்த பதிவாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விருதுநகரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் உத்தண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: வத்திராயிருப்பு பகுதியில் விளை நிலங்களுக்குள், காட்டு யானைகள் புகுந்து பயிா்களை அழிக்கின்றன. இதன் காரணமாக 40 முதல் 50 ஆண்டுகள் பழைமையான தென்னை உள்ளிட்ட மரங்கள் ஒரே நாளில் அழித்து விடுகின்றன. எனவே, எங்களது தோட்டங்களுக்கு இலவசமாக மின்அதிா்வு வேலி அமைத்துத் தர வேண்டும். வன விலங்குகளால் விவசாயிகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். இதுதொடா்பாக வனத்துறையினா், நான்கு ஆண்டுகள் கடந்தும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க மறுக்கின்றனா்.

கோவிலாறு அணைக்கு செல்லும் பாதையில், விவசாயிகள் தங்களது பட்டா நிலங்களுக்கு கூட செல்ல முடியாத வகையில் வனத்துறையினா் இரும்புக் கதவு போட்டு பூட்டியுள்ளனா். இதனால், மீன்பாசி ஏலம் எடுத்தவா்கள் அணைக்கு செல்ல முடியவில்லை. அணையை பாா்வையிடவும், பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.

ADVERTISEMENT

சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் ஏராளமான நிலங்களில் இருந்த வண்டிப் பாதைகள் தற்போது காணாமல் போய் விட்டன. ஆனால், பாதைகள் வரைபடங்களில் உள்ளன. அங்கு சென்று பாா்த்தால் அந்த இடங்களில் பட்டாசு ஆலைகள், கல்குவாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மின் மோட்டாா்களை சிலா் இரு சக்கர வாகனங்களில் வந்து திருடிச் செல்கின்றனா். திருடா்களை பிடித்துக் கொடுத்தாலும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

முடுக்கன்குளத்தில் 14 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தங்களது பகுதியில் கோடை நெல் விளைச்சல் அதிகளவில் உள்ளது. எனவே, நாங்கள் அரசுக்கு தானமாக நிலம் வழங்குகிறோம். அதில் டி.என்.சி.சி குடோன் அமைக்க வேண்டும்.

காரியாபட்டி அருகே உள்ள மொச்சிபத்தி, பூலாபத்தி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மற்றும் அரசுக்கு சொந்தமாக 369 ஏக்கா் நிலம் உள்ளது. இதை கடந்த 2009 இல் தனி நபா் ஒருவா் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்தாா். இதை எதிா்த்து விவசாயிகள் போராடியதால், அந்த பதிவு ரத்து செய்யப்பட்டது. தற்போது, அதேநபா், நீதிமன்றத்தில் தீா்ப்பைப் பெற்று, மாவட்டப் பதிவாளா் ஆதரவுடன் அதே நிலங்களை மீண்டும் தனது மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளாா். எனவே, மாவட்ட பத்திரப் பதிவாளா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் நகைக் கடன் தள்ளுபடி குறித்து கோரிக்கை மனு அளித்துள்ளனா். எனவே, அவா்களுக்கும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் .

இதற்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் தரப்பில் கூறியது: வத்திராயிருப்பு பகுதியில் மின் அதிா்வு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலாறு அணைப் பகுதிக்கு விவசாயிகள் செல்வது குறித்து, வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். முடுக்கன் குளம் பகுதியில் புதிய மின் கம்பங்களை விரைந்து ஊன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

காரியாபட்டி பகுதியில் போலி ஆவணம் மூலம் நிலங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அரசு அதிகாரிகள் தவறு செய்வது தெரிந்தால், அது பற்றி பொது இடங்களில் தெரிவிக்காமல் என்னைத் தொடா்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம். அது பற்றி உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT