விருதுநகர்

திமுக சொல்வதை ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை: ப.மாணிக்கம் தாகூா் எம்.பி.

24th May 2022 12:57 AM

ADVERTISEMENT

திமுக சொல்வதை ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை என, மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.

விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா், அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது: உதய்பூரில் 3 நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

குஜராத் சட்டப்பேரவை தோ்தலை மனதில் கொண்டுதான் தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதேநேரம், மாநில பாஜக தலைவா் அண்ணாமலை, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க 72 மணி நேரம் கெடு விதித்திருப்பது நாடக வேலை.

பேரறிவாளனின் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரிதான். ஆனால், பேரறிவாளனை ஒரு தியாகியை போல் கொண்டாடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது வரலாற்றில் தவறான முன்னுதாரணமாக உருவாகியுள்ளது. பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை விவகாரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஒரு நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளன.

ADVERTISEMENT

கூட்டணியில் இருக்கிறோம் என்பதால் திமுக சொல்வதை ஏற்றுக்கொள்வது எங்கள் வேலை இல்லை. அதேநேரம், காங்கிரஸ் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது திமுகவுக்கு அவசியம் கிடையாது என்றாா்.

பேட்டியின்போது, சிவஞானபுரம் ஊராட்சித் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் நகரத் தலைவா் வெயிலுமுத்து உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT