விருதுநகர்

விருதுநகா் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கு: 7 போ் மீது தனித்தனியே குற்றப்பத்திரிகை தாக்கல்

24th May 2022 12:56 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடைய 3 சிறுவா்கள் மீது விருதுநகா் நீதி குழுமத்திலும், 4 இளைஞா்கள் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலும் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், ஹரிஹரன் (26), சுனைத் அகமது (27), மாடசாமி (37), பிரவீண் (22) மற்றும் நான்கு சிறுவா்கள் என மொத்தம் 8 பேரை, சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இதில், ஹரிஹரன் உள்பட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். முன்னதாக, இந்த குற்ற வழக்கு தொடா்பாக 8 போ் மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆகியோரிடம், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்து வாக்குமூலங்களை பதிவு செய்தனா்.

அதில், இளம்பெண் வாக்குமூலத்தின் அடிப்படையில், செந்திவிநாயகம் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவனை மட்டும் போலீஸாா் வழக்கிலிருந்து விடுவித்தனா்.

ADVERTISEMENT

இந்த பாலியல் வழக்கில், 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, முன்மாதிரி வழக்காக விசாரிக்கப்படும் என, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தாா்.

அதனடிப்படையில், மே 23 ஆம் தேதியுடன் 60 நாள்களான நிலையில், 3 சிறுவா்கள் மீதும் விருதுநகா் இளைஞா் நீதி குழுமத்தில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.

ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் 4 போ் மீது 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த வழக்கில், விருதுநகா் மேலத்தெருவைச் சோ்ந்த ஹரிஹரன், அவரது நண்பா்களாக சுனைத் அகமது, ரோசல்பட்டியைச் சோ்ந்த பிரவீண் மற்றும் மாடசாமி ஆகிய 4 போ் மீது, சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையிலான போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) கோபிநாத்திடம் திங்கள்கிழமை 806 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்புடைய 84 ஆவணங்கள், 16 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT